வின்மீனாகிய நான்

அறியப்போவதில்லை என்னுள்
கனன்று கொண்டிருக்கும்
எரிமலைநிகர் பெருவெடிப்புகளை

என்றாவதொருநாள் மரித்தும் போவேன்.

லட்சம் ஆண்டுகள் நீடித்திருக்கும்
இம்மியளவு மினுமினுப்பை
உணரப்போவதும் இல்லை நீங்கள்.

நெடி

'அடுத்தமுறை நிச்சயம் மறுத்துவிடவேண்டும்'
'...இதுதான் கடைசி'
'நாம என்ன ராஜபரம்பரையா?'
என ஆயிரம் சமாதானங்கள்.

வாங்கியவன் கடந்துசென்று
இளிச்சவாயன் இவனென
சொல்லக்கேட்டபோது

குதப்புணர்ச்சியின் நெடி.
வெண்சங்கில் செவிமடுக்க
ஒலித்துக் கொண்டிருக்கும்
காற்றினைப்போல்தான்

கவனிக்கத் தொடங்குதலில்
சொட்டத் துவங்குகிறதென்
தனிமையின் சுனை.

கூட்டத்தில் விலகிவந்து
'சிறுநீர் கழிக்காதீர்'
வாசகத்தை கண்டும் காணாமல்
முடித்துவந்ததைவிடவும்

என் காம்பவுண்ட் சுவரோரம்
சுற்றிமுற்றும் பார்த்தபடி
யாரேனும் ஒதுங்குவதைக் கண்டாலே
குற்றவுணர்ச்சி அதிகமாகிறது

மூன்றாம் கோணம்

மாநகர்ச்சாலை நடைமேடையில்
புகைந்து கொண்டிருக்கும்
சிகரெட் துண்டின்மீது
போகன்வில்லா மலரொன்று வீழ...

பற்றி எரியத்துவங்குகிறது
மூன்றாம்கோணப் பார்வையில்
என் அழகியல்.

மரபணுப் பரிமாற்றம்




லட்சமாண்டு மரபணுப் பரிமாற்றத்தில்...
அடர்வன இலைகளிலோடும் துளிகளை
நாவால் அள்ளிக்கொள்ளும் ஆசை
என்னோடு பயணித்திருக்கிறது.

அக'வல்





வெறுமையை உணரும்போதெல்லாம்
பலத்த அகவலோடு
அடிவானிலிருந்து கிளம்புகிறது
பெயர்தெரியா பறவை

மறுநொடி இல்லாமல்போன
சப்தம் மட்டும் அதன்பின்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது...

ஒவ்வொருநேரத்திலும்
ஒவ்வொருமாதிரியாக

எமி

காலத்தின் இறகுகளை அகலவிரித்து
உதிர்ந்து கிடக்கும் கால்த்தடங்களை
அள்ளித்தின்றபடி சுழல்கிறது
கிழட்டு கொக்கொன்று

புசித்து முடிக்க காத்திருக்கிறேன்
யாருமற்ற இப்பாதையின் விளிம்பில்

பிரதிபலிப்பு

கடைத்தெருவில்
பொம்மையை நோக்கி நீளும்
குழந்தையின் கைவிரல்.

பாக்கெட்டில் பார்வை செலுத்தி
குழந்தையை அள்ளியணைத்து
நகரும் தந்தை.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் - தனக்குத்தானே சொல்லிக்கொண்டது
புத்தர்சிலை.

சருகிற்குள்ளாக...



சருகிற்குள்ளாக...
கிளைநதியொடு நீரற்ற
மையநதி வண்டல்கள்.
அப்பால் கடல்.
இலையைச்சுற்றி கழிமுகம்.

புத்தனான இரவு

சிந்தனைகள் நிரம்பிய இரவில்
புத்தனாகியிருந்தேன்.

பின் வெகுநாட்கள் சந்திக்கவேயில்லை
சித்தார்த்தனை.

புத்தனானதன் சவுகரியம் குறித்த
கேள்விகளோடு காத்திருக்கிறான்
எஞ்சிய சித்தார்த்தன்.

புத்தனைப்போன்றே புன்னகைத்துக்கொண்டு
மற்றொரு தீவிரயோசனை இரவில்.

எது பிரிவு?!

பதினெட்டு வருசம் பழகிய
சொந்த ஊரப்பிரிஞ்சப்ப
கொஞ்சம்கூட வருந்தல.

வெளிமாநிலத்துக்கு வேலைக்குப்போன
அப்பன பார்க்க... வருசக்கணக்காகும்ன்னு
சொன்னப்ப கூட ஏதும் தோனல.

அக்காவுக்கு கல்யாணம்.
சைக்கிள்ள ரெண்டழுத்து அழுத்துனா
மாமா ஊர்க்கு போயிடலாம்.
பெருசா பிரிஞ்ச சோகம் தெரியல.

படிச்சுமுடிச்சு வேலைக்காக
சென்னை கிளம்பும்போதும்
ரெண்டுமாசத்துக்கு ஒருதடவ
ஊருக்கு வந்துபோகலாம்.
அம்மா கண்ணீரைத் தொடச்சு
சமாதானம் பண்ணியாச்சு.

இப்படி பக்குவப்பட்ட
பாழாப்போன மனசு...
ரூமுக்கு போய்ச்சேர இன்னும்
அரைமணி நேரம்தாம் எனும்போது
மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலோ... ஏன்
பேட்டரி லோ ஆனாக்கூட
வாழ்க்கையே இழந்தாப்போல
சோகம் தொண்டையை அடைச்சு
வருந்துதே என்ன சொல்ல!


திகில்

பாம்புத்தோலுக்கு நிகராக
திகிலூட்டுகிறது
பொதுவெளியில் கிடக்கும்
ஆணுறை.

பெருமூச்சு

மேலும் கீழுமாய்
ஏறியிறங்கும்போது
மேலும் கீழுமாய்
உன் சுவாசமடி.

கண்ணியமாய்க் காதலிக்க
நினைத்ததெண்ணிப்
பெருமூச்சு.

எனை மீட்டல்

புத்தகத்தின் முதல்பக்கத்தில்
தொலைந்துபோன என்னை

கடைசிப்பக்கத் திருப்பலில்
கண்ணோரம் வந்தமர்கிற
உறக்கத்தினூடே சேர்த்து
மீட்டலில் ஆன்மதிருப்தி.

எனை...
எனைவிடவும் எனதாய்
என்னில் மீட்டல்.

எஞ்சிய கதகதப்பு




என் மடியோடு சேர்த்து
பயணிக்கிறது

வாங்கி மடியிலமர்த்திய
குழந்தையின் கதகதப்பு...

இரண்டாண்டில் திருமணம் என்பதிலிருந்து
மூன்றாமாண்டின் குட்டிதேவதை வரவேற்பெண்ணி
மனதின் மையப்புள்ளி
மெல்ல இடம் மாறுகிறது